• Sunrise At: 5:12 AM
  • Sunset At: 6:40 PM
info@example.com +(00) 123-345-11

           

றமழான் மாதம் நெருங்கிவிட்டாலே போதும். பெண்களுக்குள் ஒரு விதமான சந்தோஷம். றமழான் மாத ஹதீஸ் மஜ்லிஸ், ஆறு நோன்பு, “திருக்கல்யாணம்” போன்ற நிகழ்ச்சிகளில் குடும்பம்சகிதம் கலந்துகொள்ள தயாராக  ஆரம்பித்துவிடுவார்கள்.

ஜாமிஅதுல் ஜமாலிய்யா அருகில், றாஜா ஆலிம் மக்காமில் அடக்கம் செய்யப்பட்டுள்ளவர்களான, முஸ்தபா ஆலிம் (மஃதூமி, ஸித்தீக்கி) வலியுழ்ழாஹ் அவர்கள் ஹதீஸ் மஜ்லிஸை 1925ம் ஆண்டு வரை 27 வருடங்களும், அவர்களின்

பின்பு அவர்களின் புதல்வர் அஷ்ஷெய்கு ஹாமிதுலெப்பை ஆலிம் (ஸித்தீக்கிய்யி, மஹ்தூமி) வலியுழ்ழாஹ் அவர்கள் 63 வருடங்களும், அதனைத் தொடர்ந்து, அவர்களின் புதல்வர் அஷ்ஷெய்கு மீரான் முபீன் ஆலிம் (கபூரி, மஃதூமி, ஸித்தீக்கீ) அவர்கள் 25 வருடகாலங்கள் என ஹதீஸ் மஜ்லிஸை காலா காலமாக நடத்திவந்தார்கள்.

“அது ஒரு அழகிய, பொற்காலம்” என இன்றும் என்றும் மறக்க முடியாத ஒரு சிறப்பான  விடயம்தான்; எமது ஊரில் அபூபக்கர் ஸித்தீக் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களின் 39 ஆவது வம்ஸத்து ஆலிம்கள் சிறப்பித்த இந்த ஹதீஸ் மஜ்லிஸ்.

றமழான் வருவதற்கு முன்பே பந்தல் போடுவதற்காக வேண்டி ஓலைகள் வந்துவிடும். பெரியவர்கள் சிறியவர்கள் என பலர் பந்தல் கட்ட தொடங்கிவிடுவார்கள். பக்குவமிக்க தாய்மார்கள் ஆவலுடன் இருக்க ஆலிம் அவர்கள் முதலாவதாக நோன்பு மஜ்லிஸை காலை 10.00 மணியளவில் ஆரம்பிப்பார்கள். றமழான் மாதம் முழுவதும் ஈமானின் விளக்கம், தொழுகை, நோன்பு , நப்ஸின் படித்தரங்கள், நபிமார்கள், ஸஹாபாக்கள் வரலாறு என பல ஹதீஸ்களை பிரசங்கம் செய்வார்கள். அக்கால பெண்மணிகள் ஷெய்ஹின் வழிகாட்டலில் பக்குவமாக தமது வாழ்கையை அமைத்துக்கொண்டு றமழானை பெரும்  சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி தமது ஷெய்காகிய ஆலிம்களிடம் கற்றுக்கொள்வார்கள். பின்பு றமழானை மிக கவலையுடன் அனுப்பிவைத்து விட்டு ஆறு நோன்பிற்கான பயானை ஆலிம் அவர்கள் ஆரம்பித்துவிடுவார்கள். அதைத்தான் “திருக்கல்யாணம்” என்றும் அழைப்பார்கள்.

தாய்மார்கள், மாமியாமார்கள், அவ்வருடம் புதிதாக திருமண பந்தத்தில் இணைந்த தமது பெண்மகள்மார்களை எல்லாம் அங்கு சாரை சாரையாக  அழைத்து வருவார்கள். சன நெரிசல் மிக மிக அதிகமாகவே இருக்கும். ஆலிம் அவர்கள், ஹதீஸ் விளக்கத்தில் நபிமார்களின் திருமண வாழ்கை பற்றியும், இறுதியாக எமது நபிகளார் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமண வாழ்கை பற்றியும் பிரசங்கம் செய்வார்கள்.

மேலும் மறுமையில் நடைபெறவிருக்கும் திருக்கல்யாணம் பற்றியும் வாழ்கைக்கு தேவையான, அவசியமான, அனுபவம் வாய்ந்த பல விடயங்களை எல்லாம் உபதேசம் செய்வார்கள்.

மஜ்லில் மார்க்கத்தை கற்பதின் இன்பத்தில் பல பெண்மணிகள் இருக்க; ஆலிம் பிலேஸின் வீதியோ, கடைகளால் நிறைந்து காணப்படும். ஆண்களுக்கு “ஆல மரத்தடி பஸார்”, பெண்களுக்கு ஆலிம் பிலேஸாகிய இந்த இடம்.

அது ஒரு கண்ணுக்கினிய  காட்சியாக இருக்கும். “சுக்குரியான் பீரிஸ் மிட்டாய் ,கொச்சிக்காய் மிட்டாய், னைஸ்” என இன்றும் நினைத்துக் கூறும் சிறுவர்களின் மிட்டாய் கடைகள், பெண்களின் வீட்டுப்பாவனைப் பொருட்கள் உள்ளிட்ட கடைகள்” என அது ஒரு சிறப்பான காலம்.

“மீண்டும் வராதா” என இன்றும் பல பெண்கள் நினைக்கும் அளவு சிறப்பித்தார்கள்  அந்த ஆலிம்கள்.

காத்தான்குடி வரலாற்றில் இந்த ஸித்தீக்கிய்ய வம்ச ஆலிம்கள்  செய்த சேவைகளோ அதிகமதிகம். அவர்கள் பயான் நிகழ்த்திய இடம், ஹாமிது லெப்பை ஆலிம் அவர்கள் வாழ்ந்த வீடாகும். அவ்விடத்தை “கியாமத் நாள்வரை இந்த பெண்களுக்காக ஹதீஸ் மஜ்லிஸ் அவர்களின் புதல்வர்களால் நடைபெற வேண்டும்” என்பதற்காக வேண்டி தன்குடும்பத்திடம்  “வசிய்யத்” செய்து நன்கொடை செய்தார்கள்தான் அந்த மேன்மை பொருந்திய ஆலிம்கள். அதே போன்று தான், ஆண்கள் தமது நேரங்களை அழ்ழாஹ் பொருந்திக்கொள்ளும் விடயத்தில் அமைத்து மார்க்க வழி வாழ “ஜமாலிய்யா தறிக்காவும்” திக்ர் மஜ்லிஸும், றாத்திபுகளும், பாடசாலையில் கற்கும் மாணவர்களுக்கு “மத்ரசாவும்” என ஸித்தீக்கிய்யி வம்சத்து ஆலிம்கள் அவர்களுடைய இடத்தில் வழி அமைத்து நடத்தியது மட்டுமல்லாமல் அது கியாமத் நாள் வரை அவர்களின் வம்ஸ ஆலிம்களின் தலைமையில் நடைபெற வேண்டும் என்றும் அவர்கள் அவர்களுடைய குடும்பத்தாரிடம்  ஒப்படைத்தார்கள். தீனுக்காக பல சேவைகளில் தானும், தன் குடும்பமும், நமது காத்தான்குடிவாள் மக்கள் அனைவர்களும்   ஈடுபட வேண்டும், அனைவரும் தீனின் வழி வாழந்து அழ்ழாஹ்வின் பொருத்தத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல முன்மாதிரியான தீனுடைய பணிகளை செய்தார்கள். அனைவருக்கும் வழிகாட்டியாக திகழ்ந்தார்கள்.

அவர்களின் மேலதிக வரலாறுகள் _”முத்துக்கள் மூன்று”_ எனும் பகுதியில் தொடராக வரும்.(தொடரும்….)

Lorem Ipsum

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *

Copyright @2023 All Rights Reserved by Jamiyathul Jamaliyya